நினைவில் இருப்பவையும், பிரதிபலிப்புடனான வாழ்வின் இலக்குகளும்! | Reflecting on Oppression and Injustice

October 19, 2022

BY Thisanthini Thiruchelvam

Illustration by Safwat Saleem for The Greats

English translation below

இலங்கையின் வடபகுதியைச் சேர்ந்த நான், இலங்கையின் பல பகுதிகளில் பல்வேறு வகையான ஒடுக்குமுறைகள் நடைபெற்றதனை என்னுடைய சிறுவயதுக் காலங்களில் அறிந்திருக்கின்றேன். இவை இன, மத சாதி, வர்க்க, நிற, பால், பால்நிலை, பாலியல்பு போன்ற பல அடிப்படைகளில் நடைபெற்றிருந்தாலும், அந்தக் காலங்களில் அனேகமானவர்களால் இன விடுதலையைப்  பற்றி மட்டும் தான் சிந்திக்க முடிந்ததென நினைத்திருக்கிறேன். ஏனைய ஒடுக்குமுறைகளைப் பற்றி சிந்தித்து, தொடர்ச்சியாகச் செயற்பட்டதை  நான் எனது வளரும் பருவத்தில் அறிந்திருக்கவில்லை. ஆனால் பின்னர், பலர் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான  போராட்டங்களை முன்னெடுத்திருந்தார்கள் என்பதைக்  கேள்விப்பட்டது மட்டுமன்றி, பத்திரிகைகளிலும் வாசித்திருக்கின்றேன். 

இலங்கையில் ஒவ்வொரு  காலப்பகுதியிலும், ஏக காலத்திலும் பல வகையான ஒடுக்குமுறைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.  அதிலும் குறிப்பாக  சிங்கள பௌத்த மேலாதிக்க கருத்தியலால் ஏனைய “சிறுபான்மை” இனங்கள் மீது பாரிய  அநீதிகள் இழைக்கப்பட்டு வந்தன. இதனால், சமூகத்தில் நடைபெறுகின்ற இன ஒடுக்குமுறைகளை தவிர ஏனைய ஒடுக்குமுறைகளைப்பற்றி ஆரம்ப காலங்களில்  சிந்திக்கின்ற போது அதனுடைய கனதியை என்னால் அவ்வளவாக விளங்கிக் கொள்ள முடியவில்லை.  காரணம் ஒரு இனத்தின் மீது  திணிக்கப்படுகின்ற ஒடுக்குமுறைகளை பற்றி மட்டும் தான் சிந்திப்பதற்கு பழக்கப்பட்டிருந்தேன். இது, தேசியவாத கருத்தியல்களுக்கூடாக கட்டமைக்கப்பட்ட சிந்தனை என்று தான் நினைக்கின்றேன்.  

இந்த நிலைப்பாடு முரண் நிறைந்ததாக இருந்தது. இந்த விடயங்கள் என் மீது சிந்தனைக் குழப்பங்களை ஏற்படுத்தியிருந்தாலும் அந்த நிலைப்பாட்டில் இருந்து மாற நீண்ட நாட்கள் தேவையாக இருந்தன.    இது தான் ஒரு “சமூகத்தின் இயல்பு” என நம்பிய காலங்களும் இருந்தன.  உதாரணமாக, கணவன் என்றால் மனைவியை அடக்குமுறை செய்ய முடியும் என்ற முற்கற்பிதங்கள் என் தலைக்குள்ளும் சிறுவயதில் இருந்தே புகுத்தப்பட்டிருந்தன. கலாசாரம், பண்பாடு, பாதுகாப்பு, நம்பிக்கை, அன்பு, காதல்  என்ற பெயரில் பெண்கள் மீது திணிக்கப்பட்ட அடக்குமுறைகளை பல இடங்களில் நாங்கள் கேள்விக்குட்படுத்தவில்லை.  இந்த மாதிரி சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட ஒடுக்குமுறை சிந்தனைகளை விரும்பியோ அல்லது விரும்பாமலோ ஏற்றுக் கொண்டிருந்தோம் அல்லது அவை எங்கள் மீது திணிக்கப்பட்டிருந்தன.

ஒடுக்குமுறைகள் பல அடுக்குகளில் நடைபெறுகின்றன. இன ஒடுக்குமுறையினை மட்டும் பேசுவதால் ஏனைய ஒடுக்குமுறைகள் குறைந்துவிடும் என்பதல்ல ஆகவே நாங்கள் அனைத்துவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது. நாங்கள் ஒரு அடக்குமுறைக்கெதிராக குரல் கொடுப்பவர்களாக இருக்கும் அதே சமயத்தில் இன்னொரு அடக்குமுறையினை செய்பவர்களாகவும் இருக்கின்றோம் என்பதனை நாளடைவில் நான் உணர்ந்து கொண்டேன்.

ஆரம்பத்தில் மற்றவர்களால்  நிகழ்த்தப்படும் அநீதிகளை அல்லது அடக்குமுறைகளை மட்டுமே என்னால் கோடிட்டுக் காட்ட முடிந்தது. அதைத் தாண்டி நான் மற்றவர்களுக்கு செய்கின்ற அடக்குமுறைகளைப் பற்றி சுயபகுப்பாய்வு செய்வதில் ஒருவித தயக்கம் இருந்தது. அதை ஒரு முக்கியமான விடயமாக நான் பார்க்கவில்லை.

ஆனால் பிற்பட்ட நாட்களில் என் சிந்தனைப் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. பல கோட்பாடுகள் ஒடுக்குமுறைகளைப்பற்றி பேசியிருந்தாலும் பெண்ணிலைவாதங்கள் என்னை ஆழமாகச் சிந்திக்கத் தூண்டின. காரணம் பிறர் செய்கின்ற ஒடுக்குமுறைகளைப் பற்றி மட்டுமன்றி நான் செய்கின்ற ஒடுக்குமுறைகளையும் கேள்விக்குட்படுத்த அக்கருத்தியல்கள் எனக்கு பெரிதும் உதவுகின்றன. 

என்னுடைய அதிகாரத்திற்கு உட்பட்ட சில அடக்குமுறைகளை நானும் செய்திருக்கின்றேன். இப்போதும் பிரக்ஞையின்றி அவற்றைச் செய்கையில் சுயபரிசீலனை செய்து கொண்டு,  அவற்றை நினைத்து வேதனைப்படுவதற்கு அப்பால் அவற்றைத் திருப்பி செய்யாமல் இருப்பது தான் என்னுடைய அறம் சார்ந்தும், பொறுப்புச் சார்ந்தும் பொருத்தமாக இருக்கும் என உணர்கிறேன். அதற்காக என்னுடைய சுயத்துடன் இன்றுவரை போராடிக் கொண்டிருக்கின்றேன். என்னுடைய சுயத்தை கேள்விக்குட்படுத்தவும், பரிசோதனை செய்வதற்கும் பெண்ணிலைவாத கருத்தியலில் நம்பிக்கை கொண்ட நண்பர்கள் எனக்கு துணையாக இருந்து வருகிறார்கள். அந்த நண்பர்களை இன்றுவரை நேசிப்பதற்கு அது ஒரு முக்கியமான காரணமாக  இருக்கின்றது. 

சமூகத்தில் நடைபெறுகின்ற அடக்குமுறைகளுக்கெதிராக குரல் கொடுத்துக் கொண்டு எங்களை விட அதிகாரங்களில் அல்லது சலுகைகளில் நலிவுக்குள்ளாக்கப்பட்டவர்களை  பால், பால்நிலை, பாலியல்பு, சாதி, வர்க்கம், வயது, நிறம், போன்ற எந்த அடிப்படைகளிலும் நாங்கள் அடக்குமுறைக்குட்படுத்த முடியாது.  இவை அனைத்தையும் தான் பெண்ணிலைவாதங்கள் கேள்விக்குட்படுத்துகின்றன. இக்கருத்தியல்கள் என் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்க்கின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த சமூகத்திற்கும், எனக்கும் ஒடுக்குமுறைகளைத் தோற்றுவிக்காத வாழ்வின் இலக்கை வடிவமைத்துக் கொள்கின்றேன்.

Translated to English by Sivatharsini Raveendran

I am from Northern Sri Lanka and I have known the various oppressions that took place in many parts of Sri Lanka during my childhood. Although many oppressions took place on the basis of ethnicity, religion, caste, class, colour, sex, gender and sexuality, I thought most people in those times cared only about ethnic liberation. When I was growing up, I was unaware of people thinking of and acting on other injustices. It was only later that I heard and read in the newspapers that many people led protests against caste.

There have been different oppressions taking place simultaneously at particular times in Sri Lanka. Severe injustice has been carried out on minority communities due to Sinhala Buddhist hegemonic concepts. Therefore, earlier, when I was thinking of other persecutions other than ethnic oppression, I could not understand their severity. I was accustomed to only reflecting on ethnic injustices. I think this view may have been constructed through nationalist ideologies. 

This stance was contradictory and though it posed certain confusions, it required a lot of time for me to change this position. There was a time I believed that many things were simply the ‘nature of society’.  For example, the belief that a husband can subjugate his wife was infused into my thinking since my childhood. We also didn’t question the injustices carried out on women in the name of culture, safety, belief and love on several occasions. Whether willingly or unwillingly, we had accepted many socially constructed beliefs or acts imposed on us. 

Oppressions take place at multiple levels. Speaking only about ethnic oppression does not mean that other injustices would diminish. Therefore, we need to speak up against all kinds of injustice. As time went by, I realised that we were voicing out only against one kind of injustice, while silencing others. In the beginning, I was able to vocalise the injustice or oppressions others carry out. Beyond that, there was a hesitance in self-reflecting on the oppressions I may have carried out on others. I didn’t consider it an important aspect. But later, my thinking changed. Although we had spoken of various concepts and injustices, feminism transformed my thought process. These concepts help me not only to question the oppressions others carry out but also enabled me to reflect on the oppressions I carry out on others. 

I realised that I have also engaged in systems of oppression which are within my power. Even now, when I engage in these without awareness, in addition to self-reflecting and worrying about them, ensuring these aren’t repeated is important to my ethics and responsibility. My friends who believe in feminist values and support me to question myself and to introspect. It has been one of the major reasons why I love them till now.

While speaking against social oppression, we should be mindful of the systems of oppression we may engage in and not oppress others based on sex, gender, sexuality, caste, class, age and colour. All these are questioned and reflected on by feminists. These concepts add meaning to my life and I will continue to frame my life goals in a manner which is not oppressive to others.